தனியே நீ முணுமுணுக்கும்

அன்று,தாயின் மடி எனக்காக காத்திருந்தது !தலை சாய்த்து விழி மூடி தூங்க எனக்கு நேரமில்லை !ஆனால் இன்று மடியில் தலை சாய்த்து விழி மூடி தூங்க நினைக்கிறேன் !என் தாய் என் அருகில் இல்லை

வியாழன், 14 அக்டோபர், 2010

வெள்ளி நிலவு


வெள்ளி நிலவு
அழகாய்
வானத்தில் வீற்றிருக்க…
அதன் அழகை
மறைக்க நினைத்த
தென்னங்கீற்று…
தன் கீற்றுக் கரங்களை
விரித்தபடி
நிலவை மறைத்தது..!
அக்கீற்றினூடே
தெரிந்த அந்நிலவு
முன்பை விட
மிக அழகாக சுடர் விட்டு
பிரகாசித்தது மட்டுமின்றி...
மனதை மயககும்படியானதொரு
மந்தகாசப் புன்னகையொன்றையும்
உதிர்த்தது..!
அது போலத்தான்
உன் நிலவு முகத்தை
உன் கற்றை முடி மறைப்பதும்...
அதனூடே நீ மந்தகாசப்
புன்னகை புரிவதும்..!

என்னோடு நீ செய்த பயணம்..!


நேற்றைய பொழுது
என்னோடு நீ செய்த பயணம்...
என்னுள் இன்பத்தை
மட்டுமன்று பெண்ணே..!
என் இதயத்துள்
இனிப்பையும் ஊட்டியது..!
நீ என்னோடு
பேசிக் களித்த நிமிடங்களும்...
சீண்டி விளையாடிய தருணங்களும்...
செல்லமாய் அடித்த நிகழ்வுகளும்...
என்னோடு கைகோர்த்து
நடந்த நடையழகும்...
என் கையில் கல்வெட்டாய்
உன் காதலை பதிவுசெய்த
எழுத்தழகும்...
எனை முழுவதுமாய்
ஆட் கொண்டு விட்டன..!
அன்பிற்கினியவளே...
மீண்டுமொரு அதே
நாளிற்காக ஏங்குகிறேன்..!
தேங்குகிறேன்...!
உன்னிடம் மன்றாடுகிறேன்..!
வா என்னோடு...
மீண்டுமொரு வசந்தகால பயணத்திற்கு..!

சந்தித்துக் கொள்ளும் போது..?


உன்னை சந்திக்கும் போது
நிறைய பேச வேண்டும்
என்ற நினைப்போடு
உனை சந்திக்க வருவேன்..!
நானும் உன்னுடன்
நிறைய பேசவேண்டுமடா
என்றபடி நீயும் வருவாய்..!
நாமிருவரும்
சந்தித்துக் கொள்ளும் போது
நாம்மால் வாய் திறந்து
பேச முடிவதில்லை..!
உனை உன் வெட்கம்
பேச விடாமல் செய்து விட…
எனை உன்னழகு
பேச விடாமல் செய்து விட்டதடி…
நான் என்ன செய்வேன்..!

நீ எந்தன் காதலியானால்..!


வெண்ணிலவில் வீடு கட்டி
என் பெண்ணிலவே
உனைக் கூட்டிச் சென்று
விண்மீன்களே அசரும்படி...
உன் விரல்களைப் பற்றிக்கொண்டு
வானவீதியில் உலா வருவேன்..!
வண்ண மயில் இறகினிலே   
வாகாக மெத்தை செய்து...
பெண்மயிலே அதில் உன்னை
தூங்க வைப்பேன்..!
வெண்மேகத்தின் மழைத்துளிகளை
அருவியாக்கி
பொன் மயிலே உனை
குளிக்க வைப்பேன்..!
அதிகாலைக் கதிரவனை
அழைத்து வந்து
உன் கார்மேகக் கூந்தலை
காய வைப்பேன்..!
இவையத்தனையும் செய்ய
என்னால் முடியும்
நீ எந்தன் காதலியானால்..!

உன் மயக்கம்..!

உன் அதர வாய் திறந்து
அன்பாய் என்னை
நீயும் அழைக்கும் போது…
என் உயிரும் உருகி வழிகிறது...
உனக்குள் புதைய நினைக்கிறது..!
செல்லமாய் நீ எனை அடித்து
விளையாடும் போது...
என் கரமோ
உன்னை அணைக்கத் துடிக்கிறது...
உன் கன்னத்தைக்
கிள்ள நினைக்கிறது..!
குறும்பாய் நீயும் சிரித்திடும் போது...
உன் கன்னக்குழியின்
அழகைப் பார்த்து
என் உள்ளமும்
மகிழ்ச்சியில் விரிகிறது...
உன்னோடு ஊடல்
கொள்ள விழைகிறது..!
உன் வெட்கச் சிவப்பை
பார்த்தத்திலிருந்து...
அடிக்கடி உனை வெட்கப்பட
வைக்கத் தோணுகிறது...
உன் வெட்கத்தில்
திளைக்கத் தோணுகிறது..!
போதும் பெண்ணே உன் மயக்கம்...
எனை ஏற்றுக் கொள்வதில்
ஏன் தயக்கம்..?

உன் நிழல் போலத்தான்..!


நீ நடந்தால்...
உன்னுடனேயே நடக்கும்..!
நீ சிரித்தால்...
உன்னுடனேயே சிரிக்கும்..!
நீ அழுதால்...
உன்னுடனேயே அழும்..!
உன் நிழல் போலத்தான் அன்பே...
என்னுடைய காதலும்..!  

எனக்காக எழுதப்பட்ட கவிதை..!

ன் கண்ணெனும் கேமரா
சிறை பிடித்த கவிதைகளில்
மாபெருங் கவிதை நீ..!
ஆதலால்தான்
என் கண்ணை விட்டு என்றும்
அகலாமல் இருக்கிறாய்..!
என் இதயமெனும் இதழ்
படித்தக் கவிதைகளில்
மாபெரும் இன்பக் கவிதை நீ..!
ஆதலால்தான்
என் இதயத்தை விட்டு என்றும்
விலகாமல் இருக்கிறாய்..!
புரிந்து கொண்டேன் பெண்ணே...
எனக்காக எழுதப்பட்ட கவிதை
நீ என்று..!

அழகான ராட்சஸி..!

உன்னுடைய அழகால்
என்னைத் தின்றது
மட்டுமின்றி...
என் பசியை...
என் உணர்வுகளை...
என் தூக்கத்தை...
என் துயரங்களை எல்லாம்
தின்று விட்டாய்..!
ஆதலால் உன்னை
அழகான ராட்சஸி
என்றழைப்பதில்
தவறேதுமிருப்பதாகத்
தோன்றவில்லையடி..!

சொல் தேவி சொல்..?

உன் நிழல் சிறிது தடுமாறினாலும்...
என் நிஜம் தடுமாறுகிறது...
உன் குரல் சிறிது தடுமாறினாலும்...
என் சித்தம் தடுமாறுகிறது...
உன் கண்களில் சிறிது நீர் கோர்த்தாலும்...
என் கண்களில் குருதி கோர்க்கிறது...
ஒற்றையாளாய் நீ அங்கே துவளும்போது
கற்றையாய் நான் இங்கே வீழ்ந்து போகிறேன்...

நீ படும் துயரங்களை எல்லாம்
செல்பேசியில் என்னிடம் சொல்லும் போது...
என் உடலின் செல்களனைத்தும்
செத்து விடத் துடிக்கின்றன..!
உன் துன்பத்தை தடுக்க முடியாமல் போனால்
மாண்டு விடுவதே மேலென்று
மண்டியிட்டு கதறுகின்றன..!
உன்னோடு நானிருக்கையில்
துன்பப்படலாமா..? நீ துயரப்படலாமா..!
சொல் தேவி சொல்..?

உன் வெட்கத்தில்..!

வெண்மேகத்தில்
மறைந்து மறைந்து
விளையாடும்
வெண்ணிலவைப் போல...
உன் வெட்கத்தில்
மறைந்து மறைந்து
விளையாடுகிறது...
உன் அழகான புன் சிரிப்பு ..!

என்றும் அழியாத..!

மேகக் கூட்டம் போன்றதுதான்
உறவும்… உடலும்..!
மின்னலைப் போன்றதுதான்
அழகும்… இளமையும்..!
மழையைப் போன்றதுதான்
மனசும்… மகிழ்ச்சியும்..!
ஆனால் என்றும் அழியாத
கதிரவனைப் போன்றதுதான்…
என் கவியும்… என் காதலும்..!

உனைக் காணும் ஆர்வத்தில்..!

பூங்காவனத்தில்
நீ எனக்காக காத்திருந்து
தவிப்பது
பிடித்திருக்கிறது..!
அதற்காகவேனும்
சற்றுத் தாமதமாக
வர முயற்சிப்பேன்..!
ஆனால் உனைக் காணும்
ஆர்வத்தில்
வெகு சீக்கிரமாகவே
வந்து விடுகிறேன்..!
இதுதான் காதல் மயக்கமோ..?

நம் இருவரும் சேர்ந்து..!

நான் என்பது இனி
நானில்லை…
நீ என்பது இனி
நீயில்லை…
நான் என்பது இனி
நீயானாய்…
நீ என்பது இனி
நானானேன்..!
நம் இருவரும் சேர்ந்து
நாம் ஆனோம்..!
இனியேனும் புரிந்து கொள்
நாமிருவரும்
தனித் தனி ஆளில்லை என்று..!

இரட்டைப் பிறவிகளா..?

உன் கொலுசும்...
புன்னகையும்...
இரட்டைப் பிறவிகளா
அன்பே..?
இரண்டும்
கலகலவென்று
சிரிக்கின்றனவே..!

உன்னால் கரையாத..!

நிலாப் பெண்ணும் உறங்குவதாகத்
தெரியவில்லை..!
இரவுப் பொழுதும் கரைவதாகத்
தெரியவில்லை..!
விளக்குகளும் அணைவதாகத்
தெரியவில்லை..!
கண்களும் இமை மூடுவதாகத்
தெரியவில்லை..!
ஆயினும் என் அன்பே...
உன்னால் கரையாத இந்த இரவு கூட...
உன்னைப் போலவே
இன்பத்தைத் தருகிறதடி..!

நீ காணும் கனவில்..!

மேகங்களை மெத்தையாக்கி...
நட்சத்திரங்களை தலையணையாக்கி...
அந்த வெண்ணிலவை
உன் அறை விளக்காக்கி...
என்னன்புக் கவி மலரே
உனைத் தூங்க வைப்பேன்..!
அப்போது..?
நீ காணும் கனவில்
உன்னோடு நான் கலந்திருப்பேன்..!

அந்தச் சூரியன் கூட..!

மாலை வேளையில்
உன்னழகைக் கண்டதால்தானோ
என்னவோ..!
அந்தச் சூரியன் கூட
வெட்கத்தால் சிவந்து
மேகத்தினுள் மறைந்து விட்டான்..!

கண்டு பிடித்துக் கொடு..!

உன்னுடைய சீண்டல்கள்
என் நினைவுகளில்
நீங்கா இடம் பிடித்து விட்டன..!
உன்னுடைய காதல் பார்வைகள்
என்னுள் தணியாத தாகத்தை
ஏற்படுத்தி விட்டன..!
உன்னுடைய மெய்த் தீண்டல்கள்
என்னுள் மறையாத பரவசத்தை
பரப்பி விட்டன..!
இவைகளால்...
பொம்மையைத்
தொலைத்துவிட்டு நிற்கும்
குழந்தையைப் போல…
இரவில் தூக்கத்தைத்
தொலைத்து விட்டு நிற்கிறேனடி..!
என் தூக்கத்தை எனக்குக்
கண்டு பிடித்துக் கொடு..!

எது எப்படி மாறினாலும்..!

அன்றோ புறா விடு தூது…
மயில் விடு தூது...
மான் விடு தூது...
அன்னம் விடு தூது...
அழகிய லிகித விடு தூது என
இயற்கை வழிகளில் காதலை வளர்த்தனர்…
நீயோ இணைய விடுதூது மூலம்
காதலை வளர்க்கிறாய்..!
எது எப்படி மாறினாலும்
காதல் என்றும் மாறுவதில்லை…
நான் உன் மேல் கொண்டிருக்கும்
மாறா மையலைப் போல..!

நான் வாழ்வதை விட..!இந்த உலகத்தில்
நான் வாழ்வதை விட...
உனக்கே
நான் உலகமாய்
வாழ ஆசைப்படுகிறேன்..!
இதற்கு நீ என்ன
சொல்கிறாய் பெண்ணே..!

உன் மலர் முகத்தை..!

நிலவைக் கண்டு மலரும்
அல்லி மலர் போல...
உன் மலர் முகத்தைக்
கண்டால்தான்...
என் மனசு மலருவேன் என்கிறது..!
என் இதய நிலவே...
அதற்காகவேனும் விரைந்து வா..!

கொலுசுச் சத்தங்களை..!

கொலுசுச் சத்தங்களைக்
கேட்கும் போதெல்லாம் நீதான்
வந்துவிட்டாயோ என
ஆவலோடு திரும்பிப் பார்க்கிறேன்..?
அப்படி திரும்பித் திரும்பிப்
பார்த்ததில் என் கழுத்து
வலிக்கிறதோ இல்லையோ..?
நீ இன்னும் வரவில்லை என்பதால்
என் மனசு வலிக்கிறது..!

உன்னிடத்தில் நானும்..!'நீ எனக்கு வேண்டவே
வேண்டாமென்று...
சொல்லிய பின்பும்
ஏனடா என்னையே
சுற்றிச் சுற்றி
வருகிறாய்' என்றாய்..!
மலர் வேண்டாமென்று
சொன்னால் மட்டும்
வண்டு விட்டு விடுமா என்ன..?
தேனிருக்கும் இடத்தைச்
சுற்றித்தானே
அதுவும் சுற்றி வரும்..!
அது போலத்தான் பெண்ணே
உன்னிடத்தில் நானும்..!

உனைப் பார்த்த வினாடியிலிருந்து..!

நீ யார்..?
என்ன உன் பேர்..?
ஏது உந்தன் ஊர்..?
இவைகளை நான்றியேன்…
ஆனால்…
உனைப் பார்த்த வினாடியிலிருந்து
இனி நீதான் நான்…
உன் பேர்தான் இனி என் பேர்…
உன் ஊர்தான் இனி என் ஊர்..!

நீ என்னிடம் அப்படி..?உன் பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன்
காதினிக்கப் பேசுகிறாய்..!
அவர்களின் கன்னங்களைக் கிள்ளியபடி
கொஞ்சி மகிழ்கிறாய்..!
இவற்றையெல்லாம் பார்க்கும் போது
பொறாமைதான் மிஞ்சுகிறது..!
நீ என்னிடம் அப்படி
கொஞ்சிப் பேச வில்லையே என்று..?

மறந்து போதல்..!உன் கூந்தல் வாசம்
பிடித்ததால்…
என் சுவாசத்தை நானும்
மறந்து போனேன்..!
உன் இதழில்
கவிதையைப் படித்ததால்...
என் கவிதையை நானும்
மறந்து போனேன்..!
என் உயிராய் நீயும்
ஆனதினால்...
என் உறவுகளை நானும்
மறந்து போனேன்..!

ஒத்துக் கொள்கிறேன்..!


எப்போதும்
சமூகத்தைப் பற்றியே
சிந்தித்துக் கொண்டிருந்த என்னை...
சதா சர்வ நேரமும்
உனைப் பற்றியே
சிந்திக்க வைத்து விட்டாய்..!
இதனால் என்னை
உன் காதலனாக்கினாயோ
இல்லையோ..?
உனைப் பற்றியே எழுதும்
காதல் கவிஞனாக்கி விட்டாய்..!
ஒத்துக் கொள்கிறேன்
கொள்கைப் பிடிப்போடு இருந்த
என்னைக்கூட
உன் கொள்ளை அழகால்
மாற்ற முடியும் என்பதை..!

அணு அணுவாய் உன்னழகில்..!இரு புருவமும் ஒரு சேர
மேலே தூக்கிக் காட்டி...
என்னவென்று எனை நோக்கி
உன் கண்ணாலே வினவுகிறாய்..?
கன்னி உன்றன் அழகைப்பார்த்து
என் கண்ணிமைகள்
அசையவில்லை...
அனிச்சை செயலை மறந்தபடி
அணு அணுவாய்
உன்னழகில் ஆழ்ந்து போகிறேனே...
அதை நீ அறியாயோ பெண்ணே..?

என்னையே பரிசளிக்கிறேன்..!

என் தூக்கத்தை…
என் பசியை…
என் கனவுகளைத் திருடிய
அழகிய திருடியே...!
இவைகளைத்
திருடிய உனக்கு
என்னையே பரிசளிக்கிறேன்…
ஏற்றுக் கொள்வாயா..?

அனுதினமும் உன்னையே..!

சூரியன் மேல் கொண்ட காதலால்
அவனையே சுற்றிச் சுற்றி
வருகிறது பூமி..!
பூமியின் மேல் கொண்ட காதலால்
அதையே சுற்றிச் சுற்றி
வருகிறது வெண்ணிலவு..!
உன் மேல் நான் கொண்ட காதலால்
அனுதினமும் உன்னையே சுற்றியபடி...

மலர் வனமெங்கும்..!மலர்வனத்தில் உள்ள மலர்கள்
எல்லாம் மொட்டவிழ்ந்த பிறகுதான்
நறுமணத்தைப் பரப்புகின்றன..!
ஆனால்... மலர் வனத்தில்
நீ  காலடி வைத்த மறுகணமே
உன் நறுமணம்
மலர்வனமெங்கும் வீசுதடி..!
உன் நறுமணத்தினால்
அம்மலர்கள்
தங்களின் (சு)வாசத்தை மறந்து
உன் வாசத்தில் மயங்கி நிற்கின்றனடி..!

அழகிய திருடியே...!


என் விடியலை...
என் தூக்கத்தை…
என் பசியை…
என் கனவுகளைத் திருடிய
அழகிய திருடியே...!
இவைகளைத் திருடிய உனக்கு
என்னையே பரிசளிக்கிறேன்…
ஏற்றுக் கொள்வாயா..?